நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தினால் சிறுநீரகம் செயல் இழப்பதுடன், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதும், வலிநிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 20லட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே சிறுநீரகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை சர்வதேச சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது, அதன்படி மார்ச் 10ம் தேதியான இன்று உலகம் முழுவதும் சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படும்பட்சத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் சிறுநீரக பாதுகாப்பு மற்றும் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நம் உடலில் மிகமுக்கிய பாகங்களில் ஒன்றாக இருக்கும் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்து கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியும், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் கிராம மக்கள் அவதியுறும் நிலையில் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி மருத்துவர்கள், செவிலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணா சிலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு, சத்திரம் பேருந்து நிலையம், தெப்பக்குளம் வழியாக சென்று மீண்டும் அண்ணாசிலையை வந்தடைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.