தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்|தலின் போது தி.மு.க. தொண்டரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அவர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரம் மூன்று நாட்கள் கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கடந்த திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் கையெழுத்திட்ட ஜெயக்குமார் இன்று மூன்றாவது நாளாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;
என் மீது கொரோனா பரவ காரணமாக இருந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளதாக சொல்கிறீர்கள். அதுபற்றி எனக்கு தெரியாது. அரசியல் கட்சிகளில் முக்கிய நிர்வாகிகள் வரும்போது தொண்டர்கள் வருவது இயல்பானது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அப்போது 10,000 பேரை கூட்டிய போது கொரோனா வரவில்லையா?. அ.தி.மு.க. தொண்டர்களின் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க.வினர் எதையும் செய்வார்கள். தமிழக கவர்னரை திரும்பப்பெற வேண்டும் என்று டெல்லியில் வலியுறுத்துவார்கள். ஆனால் இங்கே மு.க. ஸ்டாலின் கவர்னரை போய் சந்திப்பார். கவர்னரின் அதிகாரம் வரையறுக்கப்பட்டது. நீட் தேர்வு ரத்து மசோதாவை நிறுத்தி வைத்திருப்பது தொடர்பாக அவரிடம் தான் கேட்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வழக்கம்போல் பட்ஜெட்டில் அல்வா தான் கொடுப்பார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் வேலை தான் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த இரு தினங்கள் காவல் நிலையத்துக்குள் கையெழுத்திட ஜெயக்குமார் வந்தபோது கட்சி நிர்வாகிகள் அவரை பின்தொடர்ந்து வந்தனர். இயக்கம் மற்றும் அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் கொரோனா விதிமீறல் தொடர்பாக ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரை மட்டுமே போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். கட்சி நிர்வாகிகளை காவல் நிலைய நுழைவு வாயில் பகுதியில் கயிறு கட்டி போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆகவேபேட்டியைத் தொடர்ந்து கட்சியினர் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்ப முயன்றனர்.அதனை ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தடுத்தனர்.கையெழுத்திட வந்த போது எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வக்கீல் ராஜ்குமார், புறநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட துணைச்செயலாளர் வனிதா, பேரவை செயலாளர் பத்மநாதன், பகுதி செயலாளர் கள் நாகநாதர் பாண்டி, அன்பழகன், சுரேஷ் குப்தா, வெல்லமண்டி ஜவகர்லால் நேரு, வசந்தம்செல்வமணி, வண்ணார் பேட்டை ராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.