சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதில் பேசிய அவர்,
2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க அரசு சொத்து வரியை உயர்த்தியது அப்போது மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்த போது அதிமுக அரசு சொத்து வரி உயர்த்தியதை கைவிட்டது. இரண்டாண்டு காலம் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சொத்து வரியை தி.மு.க அரசு உயர்த்தி உள்ளது. ஸ்டாலின் தமிழக முதலமைச்சரானதிலிருந்து மக்களை பற்றி கவலைப் படுவதில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி காலத்தில் வரி உயர்த்தும் சூழல் ஏற்பட்டால் மக்களின் நிலையை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் வரியை உயர்த்துவார்கள். ஒன்றிய அரசின் மீது பழியை போட்டு மக்கள் மீது தி.மு.க அரசு வரியை உயர்வை ஏற்படுத்தி உள்ளது. நிர்வாக திறமையில்லாத அரசாக ஸ்டாலின் தலைமையிலான அரசு உள்ளது. இந்தியாவிலேயே புத்தக வடிவில் தேர்தல் வாக்குறுதி வழங்கிய கட்சி தி.மு.க தான். அதில் 457 வது வாக்குறுதியில் சொத்து வரி அதிகரிக்கப்படாது என கூறியுள்ளார்கள். ஆனால் தற்போது சொத்து வரியை உயர்த்தி உள்ளார்கள். உயர்த்த வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
தாலிக்கு தங்கம் திட்டதை தி.மு.க அரசு கைவிட்டுள்ளார்கள். இந்த திட்டத்தால் பெண்கள் அதிகம் உயர் கல்வி கற்றார்கள். தற்போது இத்திட்டத்தை கைவிட்டுள்ளதால் உயர்கல்வி படிக்கும் பெண்கள் எண்ணிக்கை குறையும். இந்தியாவிலேயே உயர்கல்வி கற்பவர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதற்கு காரணம் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கல்விக்கு வழங்கிய பல்வேறு திட்டங்கள் தான் காரணம். ஏழை மக்களை பற்றி கவலைப்படாத அரசு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தான். இந்த ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. தி.மு.க அரசு இருக்கும் வரை மக்கள் கனவில் தான் வீடு கட்ட முடியும். கடந்த 10 மாத ஆட்சியில் எதில் எதிலெல்லாம் பணம் கிடைக்குமோ அதில் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
விளம்பரத்தால் தான் தி.மு.க அரசு காப்பாற்றப்பட்டு வருகிறது. விளம்பரம் இல்லையென்றால் தி.மு க கரைந்து விடும். எதையும் செய்யாமல் செய்ததை போல் பாவனை செய்து வருகிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறார். அ.தி.மு.க பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கிறார்கள். 10 மாத ஆட்சியில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். அங்கு துபாய் கண்காட்சி முடிவடைய இருந்த நிலையில் தமிழகத்தின் அரங்கை திறந்து வைத்தார். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா தான் அவர் துபாய்க்கு சென்று வந்தார். பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க சார்பில் கொண்டு வந்தோம். அந்த திட்டங்களையெல்லாம் தி.மு.க அரசு கைவிட்டு விட்டது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் தொடர்ந்து தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மியை அ.தி.மு.க அரசு தடை செய்தது. ஆனால் தி.மு.க அரசு இது தொடர்பான வழக்கில் சரியாக வாதாடாததால் மீண்டும் அது கொண்டு வரப்பட்டு விட்டது. நான்கு மாதத்தில் ஆன் லைன் ரம்மி தடை செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் அறிவித்தார் ஆனால் இதுவரை அதை செயல் படுத்தவில்லை. உடனடியாக அதை தடை செய்ய வேண்டும். 10 மாத ஆட்சியிலேயே எல்லா துறைகளிலும் முறைகேடு நடந்து வருகிறது. அரசு அதிகாரிகள், பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை தற்போது நிலவி வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் அதிகம் பெருகிவிட்டது அதனை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் தி.மு.க விற்கு எதிர்காலம் இல்லாது போய்விடும்.
அம்மா என்ற பெயர் வந்தாலே ஸ்டாலினுக்கு அலர்ஜியாக உள்ளது அதனால் தான் அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டார்கள். மூன்று அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இல்லாமல் தீர்ந்து விட்டது. போக போக மின் தடை அதிகம் ஏற்படும். உள்ளாட்சி தேர்தலில் திள்ளுமுள்ளு செய்து வெற்றி பெற்றார்கள். ஓட்டு போட்ட மக்களுக்கு சொத்து வரியை உயர்த்தி வேட்டு வைத்து விட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் சட்டமன்ற தேர்தலை காட்டிலும் 16 சதவீதம் குறைவான வாக்குகளே பதிவாகி உள்ளன 16% மக்கள் வாக்களிக்கவில்லை அதற்கு காரணம் தி.மு.க மீதான் வெறுப்பு தான் காரணம். தி.மு.க மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள் விரைவில் மின்கட்டணம், போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் உயர்த்தப்படும். ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்திய அரசு ரஷ்யாவுடன் பெட்ரோல் குறைவான விலையில் குறைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் உடன்பாடு எட்டப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை குறையும். யார் அதிகம் பணம் வாங்கி தருகிறார்கள் என்பதில் அமைச்சர்களுக்கிடையே போட்டி நடந்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தாலும் வரலாம். தேர்தல் ஆணையமும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார் என கூறி உள்ளார்கள். எனவே இந்த ஆட்சிக்கு இன்னும் குறைவான காலமே இருப்பதால் அதிலாவது மக்களுக்கு அதில் நன்மை செய்ய வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, சிவபதி, முன்னாள் எம்.பிக்கள் குமார், ரெத்தினவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.