திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனி பகுதியை சேர்ந்த வாலிபர் விக்னேஷ்வரன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இவர்கள் தங்கியிருந்த அரசு குடியிருப்பு இடிக்கப் பட்டதையொட்டி வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார். இதனால் இந்திய தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பிடம் முகவரி மாறுதல் குறித்து விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தபாலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அனுப்பி வைத்தனர். அந்த வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை வாங்கி பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த புதிய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் தனது புகைப்படம் இல்லாமல், பெயர் மற்றும் வீட்டு முகவரி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக புகார் அளிக்கலாம் என திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் பதிவு அதிகாரியின் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அந்த அலைபேசி தற்போது செயல்படவில்லை என வந்தது மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியதாக அந்த வாலிபர் தெரிவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் எழுத்து பிழை அல்லது தவறுதலாக வேறு பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கும் அல்லது வீட்டின் முகவரி எண் அல்லது தெரு தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏன் வேறு ஒருவரின் புகைப்படம் கூட மாறி வந்திருக்கிறது.
ஆனால் இப்படி வாக்காளரின் அடையாள அட்டையில் அவரின் புகைப்படமே இல்லாமல் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை பிரிண்ட் எடுக்கும் பொழுதோ அல்லது அதனை தபாலில் அனுப்புவதற்கு முன்பு இதனை கவனிக்காமல் கவனக்குறைவாக செயல்பட்டது. மக்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.