11-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பிச்சைமுத்து மற்றும் மாநில பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த மாநிலம் தழுவி கருப்பு சட்டை அணிந்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் எனவும், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை நியாயவிலைக் கடை பணியாளர் களுக்கும் வழங்கக் கோரியும், அனைத்து நியாயவிலை கடைகளுக்கு புதிய விற்பனை முனையம் வழங்கக் கோரியும், மேலும் மோடம் மூலம் வழங்கப்பட்ட இணையதள சேவை மேம்படுத்தப்பட வேண்டும் எனவும்,
விற்பனை முனையம் பழுது நீக்கும் தொகையை நியாய விலை கடை பணியாளர்களிடம் வசூல் செய்யக்கூடாது எனவும், சரியான எடையில் தரமான பொருட்களை அரிசி உள்ளிட்ட பொட்டலமாக வழங்க கோரியும், ஓய்வு பெற்ற நியாயவிலைக் கடை பணியாளர் களுக்கு ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.