திருச்சி அரியமங்கலம் கோட்டம் வார்டு எண் 62 பாப்பா குறிச்சி வடக்கு காட்டூர் அருந்தியர் தெருவில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, தெரு விளக்கு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று அடிப்படை வசதிகள் கேட்டு கருப்புக்கொடி ஏந்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்புலிகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அருந்ததியர் தெருவில் அடிப்படை வசதிகள் கேட்டு இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்புலிகள் கட்சியினர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்து. மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன் அருந்தியர் தெரு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக இந்த முற்றுகை போராட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சியின் திருச்சி மத்திய மண்டலம் செயலாளர் ரமணா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வரதன், இளம் புலிகள் மாநகர செயலாளர் கார்த்திக் சின்னமணி மற்றும் துணை செயலாளர் முத்துவேல், திருச்சி மாவட்ட செயலாளர் மலர்க்கொடி, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் முனியம்மா, கிளை செயலாளர் காளீஸ்வரி மற்றும் ஊர் மக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்