இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையிலேயே அம்மன் கோயில்களுக்குச் சென்று மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நாள் ஆடி வெள்ளிக் கிழமையுடன் பௌர்ணமியும் சேர்ந்து வருவது இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பு.

இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் ஆலயங்களில் திருவிழாக்கோலம்தான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். எனவே, ‘ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார்’ என்பது ஐதீகம்.

ஆடி வெள்ளியில் அம்மைனை வணங்கி, நிம்மதியை வேண்டி வழிபடுவது மக்களின் வழக்கம். எத்தனை வெள்ளிகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்நாளில், விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.

இந்நிலையில், சிறப்பான இந்த நன்நாளில் அம்மனின் அருளைப் பெற, திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். பல்வேறு கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.