தமிழகத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகபடியான மக்கள் தினமும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதால் மருத்துவர்களின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பின்படி, சென்னையில் கோவிட் 19 தடுப்பு பணியில் ஆர்வமுள்ள பயிற்சி மருத்துவர்கள் விண்ணப்பிக்க, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஆணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தன்னுடைய டிவிட்டரில், “அயல் நாடுகளில் மருத்துவம் படித்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேர்க்கப்படுகின்றனர்.இன்றைய கரோனா நோய்த்தொற்றின் அவசர நிலையை கருத்திற்கொண்டு மீதமுள்ள சுமார் 600 இளம் மருத்துவர்களுக்கு, உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.