திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் விதமாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது தான் காவிரி மேம்பாலம். குறிப்பாக மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் மேம்பாலத்தின் தடுப்பு கட்டை அருகே நின்றுகொண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து செல்லும் அழகையும், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலையும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயின் ராஜகோபுரத்தையும் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த காவிரி மேம்பாலம் நாளடைவில் திருச்சியின் அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. காவேரி மேம்பாலத்தை பலப்படுத்தும் விதமாக பழைய தடுப்பு கட்டைகள் அகற்றப்பட்டு, புதிய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு தார் சாலையும் போடப்பட்டது.

இந்நிலையில் காவிரி மேம்பாலத்தின் இணைப்பு பகுதியில் போடப்பட்ட தார்சாலையின் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளது. இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயத்திலும், மேலும் வாகன ஓட்டிகளின் டயர்களை பதம் பார்க்கும் இரும்புக் கம்பிகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி மேம்பாலத்தில் இணைப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் தார்சாலை பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தது. இது குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்ததன் பேரில் மேம்பாலத்தின் தார்சாலைப் பகுதி சரி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் இப்பகுதியில் ஜல்லி கற்கள் பெயர்ந்து இரும்பு கம்பிகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்து தரும்படி வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *