தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நபிகள் நாயகம் குறித்து விளக்கும் வகையில் சிறப்பு மாநாடு திருச்சி செம்பட்டு அருகே ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சிங்காரத்தோப்பு அருகே இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் அலாவுதீன், மாநில துணை தலைவர் ஆல்பா நசீர், மாநில செயலாளர் உணர்வு இப்ராஹிம் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கிடையே ஜெய்னுல் ஆபிதீன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

200 கோடி முஸ்லிம்கள் முகமது நபியை தங்களுடைய தலைவராக, வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அப்படி இருக்கும் நிலையில் பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா என்பவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து இருந்தார். இது இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உலகத்தில் உள்ள முஸ்லிம் நாடுகள் ஒருங்கிணைந்து இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து நுபுர் சர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நபிகள் நாயகத்தை பற்றி அறியாத காரணத்தினால் இது போன்று பேசி வருகிறார்கள். அவர்களுக்கு நபிகள் நாயகத்தின் வரலாற்றை எடுத்து கூறி விளக்குவதற்காக திருச்சியில் ஜனவரி 8 ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இதில் முஸ்லிம் அல்லாத மக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பொது சிவில் சட்டம் குறித்து விவாதிக்க தயார் என கூறியுள்ளார். அவர் பாஜகவின் சார்பில் விவாதத்தில் கலந்து கொண்டால் நாங்கள் விவாதிக்க தயார். அந்த விவாதத்தில் அவரை முறியடித்து விட்டால் பாஜக இனி பொது சிவில் சட்டம் குறித்து பேச கூடாது.குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு EVM இயந்திரம் தான் காரணம். சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற பாலம் இடிந்த விபத்தில், அரசு நிர்வாகம் மீது மக்கள் கோபத்தில் இருந்தனர். அந்த தொகுதியில் பாஜக 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 13 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உண்மையில் மின் வாக்குபதிவு இயந்திரம் தான் வெற்றி பெற்றுள்ளது. முறையாக தேர்தல் நடைபெற வில்லை. வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றால் தான் உண்மையை பிரதிபலிக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *