அகில பாரத இந்து மகா சபா தேசிய தலைவர் வி.எஸ்.ஆர் ஆனந்த் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. அ.சோக்குமார், ஓம் இந்து பாதுகாப்பு மகா சபா தலைவர் மதுபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலச்சந்திரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் சென்னை, தஞ்சை நெடுஞ்சாலைக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவுபடி இக்கடை சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் அந்த டாஸ்மாக் மதுபான கடையை திறக்க முயற்சித்த போது அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அப்போது மதுபான கடை திறக்கும் முடிவை டாஸ்மாக் அதிகாரிகள் கைவிட்டனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் இந்த மதுபான கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த சர்வீஸ் சாலை ஒரு வழி பாதையாகும். மதுபான கடைக்கு சென்று மது வாங்கிக் கொண்டு அந்த ஒரு வழிப் பாதையில் தான் திரும்பி வரவேண்டும். இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
ஜமால் முகமது கல்லூரி, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்டவை அப்பகுதியில் உள்ளது. இதற்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மதுபான கடையால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மது குடிப்பவர்கள் சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் தகராறு செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஆகையால் இந்த டாஸ்மாக் மதுபான கடையை அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும்.