திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் திருச்சியில் உள்ள பெல் நிறுவனம் என்பது திருச்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம். அதனை தனியாரிடம் விற்பனை செய்ய முயற்சிகள் நடக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு அது விற்பனை செய்யப்படாது என அத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் பதில் அளித்தார். ஆனால் தற்போது உற்பத்தியை குறைத்து அதனை விற்பனை செய்ய பார்க்கிறார்கள். எந்த வகையிலும் பெல் நிறுவனத்தை தனியார் மயமாக்க கூடாது.

வரும் 17-ஆம் தேதி டெல்லியில் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க உள்ளார்கள். ஆனால் அதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீர் பங்கீடு குறித்து தான் அவர்கள் முடிவெடுக்கலாமே தவிர அணை குறித்தெல்லாம் விவாதிக்க முடியாது. எனவே இந்த கூட்டம் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்.

மதுவை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக இரண்டு வாரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்கிற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆன்லைன் ரம்மியால் இதுவரை 23 உயிர்கள் பலியாகி உள்ளன எனவே தமிழ்நாடு அரசு விரைவாக தடை உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

சனாதானம் குறித்த ஆளுநரின் கருத்து குறித்த கேள்விக்கு பழமையை குறித்து பேச வேண்டாம். நாட்டில் தற்போது மக்களுக்கு தேவை கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை தான் அது குறித்து தான் பேச வேண்டுமே தவிர 2000, 3000 ஆண்டுகள் பழமையானதை குறித்து பேசினால் எந்த பயனும் இல்லை.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் சென்று விட்டால் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது அது சமூக நீதிக்கே எதிரானதாக அமையும். எனவே பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும்.

குடியரசு தலைவர் தேர்தல் குறித்து எங்கள் உயர்மட்ட குழு கூடி முடிவெடுக்கும்.

காவல் துறை விசாரணை மரணங்கள் நடக்க காரணம் காவல் துறையில் ஏதோ பிரச்சனை இருப்பதை காட்டுகிறது. காவல் துறைக்கு மன ரீதியான பயிற்சி அளிக்க வேண்டும். முதலமைச்சர் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

அ.தி.மு.க சட்டசபையில் எண்ணிக்கை அடிப்படையில் தான் எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை பேசி அதை நிறைவேற்ற வைப்பது தான் எதிர்கட்சியின் வெற்றியாக உள்ளது. அந்த வகையில் வேளாண் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து நாங்கள் கொடுத்த அழுத்தம் காரணத்தால் தான் அது நிறைவேறி இருக்கிறது எனவே எதிர்கட்சியாக சிறப்பாக செயல்படுகிறோம். உண்மையான எதிர்கட்சி நாங்கள் தான், எதுவும் இல்லாதவர்கள் அதை கூறி கொண்டே இருப்பார்கள்.

கொரொனா வை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தி.மு.க வும் அ.தி.மு.க வும் ஒன்று தான் தலைவர்கள் தான் வேறு வேறு. இந்த வித்தியாசம் குறித்து பேச வேண்டுமென்றால் பி.எச்.டி தான் செய்ய வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *