திருச்சி மாநகராட்சி கோ – அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட நியூ பாத்திமா நகர் பகுதியில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்ற உள்ளவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சாலை ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

 பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் தான் பயன் பெற்று வருகின்றனர். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் 36 சதவீதம் தான் நகர்புறத்தில் மக்கள் வசிக்கிறார்கள், பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால் பல திட்டங்களை ஒன்றிய அரசு கிராமப்புறத்தை மையமாக வைத்தே செயல்படுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 63 சதவீதம் மக்கள் நகர்புறங்களில் வசிக்கிறார்கள். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் நகர்புறங்களில் இருப்பவர்கள் பயன்பெற முடியவில்லை. எனவே தான் தமிழ்நாடு அரசு சார்பில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியில் உள்ள ஒரு மண்டலம், 27 பேரூராட்சிகள், 5 நகராட்சிகளில் மட்டும் முதற்கட்டமாக இது செயல்படுத்தப்பட உள்ளது. நிதி நிலைமைக்கு ஏற்ப இது விரிவுப்படுத்தப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் நகர்புறங்களில் உள்ள சாலை தூய்மைப்படுத்துதல், மரம் நடுதல், பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மக்கள் மேற்கொள்ள முடியும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணிமாமன்ற உறுப்பினர் பங்கஜம் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்