திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான் பட்டி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நடைபெற்ற ஊராட்சியில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப்பணிககள் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் பொதுமக்கள் தங்கள் பகுதியில் செய்யவேண்டிய வேலைகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் பேசினர். இதில் முத்தபுடையான்பட்டியில் திருச்சியில் இருந்து வரும் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும், ரேசன் கடை, குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் நூறுநாள் பணிகள் குறித்தும் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து பேசுகையில்… உடனடியாக பகுதிநேர ரேசன் கடை அமைக்கப்படும் எனவும், முத்தப்புடையான்பட்டியில் திருச்சியில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் உடையாபட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சாலமன் என்பவருக்கு இன்னும் இரண்டு தினங்களில் 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்படுவதாகவும் ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்த கிராமசபை கூட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்  பழனியாண்டி, திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மணப்பாறை முன்னாள் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்