திருச்சி மாவட்டம், முசிறி அருகே பக்தர்களால் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வருட விழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் உபநாச்சியார்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.

தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து கோயில் பிரகார உலா வந்தனர்.

அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர கோஷமிட்டனர். திருத்தேரின் பின்னர் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்தனர். மன நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பெருமாளை வணங்கி தீர்த்தம் கொடுத்தால் மன நோய் சரியாகும் என்பது ஐதீகமாகும்.விழாவில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், கோட்டாட்சியர் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *