உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை விட தற்கொலையினால் ஏற்படும் உயிரிழப்புகளை தற்போது அதிகரித்து வரும் சூழலில் தற்கொலை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. தற்கொலை என்பது ஒரு கோழைத்தனமான, முட்டாள்தனமான முடிவு என்று கூறப்பட்டாலும் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியதன் விளைவு இந்த தற்கொலை முடிவு – சர்வதேச அளவில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

15 – 29 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் தற்கொலைக்கு தூண்டப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்தியா இளைஞர்கள் மிகுந்த நாடு என கூறப்பட்டாலும் அதேநேரம் தற்கொலையிலும் முதன்மை வகிக்கிறது. குறிப்பாக மகராஷ்டிரா, தமிழகம் அதிக தற்கொலை நிகழும் மாநிலங்களில் முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொண்டிருப்பது என்பது மேலும் வேதனைக்குரிய விஷயம்.

இந்நிலையில் தற்கொலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை கல்லூரி மாணவ- மாணவியர்கள் ஒன்றிணைந்து மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றவர்கள் கூறியதாவது. ஒவ்வொரு வருடமும் உலகத்தில் ஏறக்குறைய 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் சென்ற வருடத்தில் மட்டும் அதாவது 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் அதிகமாக தற்கொலை நிகழ்ந்துள்ள மாநிலமாக மகாராஷ்டிரா அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. தற்கொலை ஒரு தீர்வு கிடையாது எனவும், தற்கொலை எண்ணங்கள் தோன்றினால் தகுந்த மன ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மாணவர்கள் மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

இந்த வாழ்க்கை ஒரு நாளில் முடிந்து போவது அல்ல… நாம் முயற்சி செய்தால் நம் வாழ்வும் மாறும்…! என்ற தன்னம்பிக்கையுடன் தரணியில் வீறு நடை போடுவோம்…! தற்கொலை இல்லா தரணியை கட்டமைப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *