திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற திமுக எம்எல்ஏ கதிரவனின் செயல்பாடுகளை பாராட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முருகானந்தம் மண்ணச்சநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியும், நேரில் சந்தித்தும் வாழ்த்து தெரிவித்தது அதிமுக வினர் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மண்ணச்சநல்லூர் சட்ட மன்றத் தொகுதியில் திமுக கட்சி சார்பில் முதல்முறையாக போட்டியிட்ட கதிரவன் , தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். இதில் சுமார் 59 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றிப் பெற்று எம்எல்ஏ ஆனார்.

எம்எல்ஏ வாக பதவி வகித்தவுடன் கொரோனா இரண்டாம் பரவல் மக்களை அதிக பாதிப்பைத் தந்தது. அரசு அறிவித்த கொரோனா பொது முடக்கத்தால் மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனை அறிந்த தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவன் தொகுதியில் உள்ள பரவலான மக்களுக்கு அரிசி, பருப்பு , மளிகைப் பொருட்கள் , காய்கறிகள் மற்றும் உடுக்க உடைகள் தனது சொந்த செலவில் வாரி வழங்கினார். பொது மக்கள் மட்டுமல்லாது தனது சொந்த கட்சிகாரர்களுக்கும் உதவினார். இது மட்டுமல்லாது கடந்த 5 ஆண்டுகளாகவே பூட்டிய நிலையில் இருந்த சட்ட மன்ற அலுவலகத்தினை தூய்மைப் படுத்தி மக்கள் பயனளிக்கும் வகையில் திறந்து வைத்து மக்கள் குறைகளை தினசரி கேட்டரிந்து வருகிறார். மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற அலுவலகத்திலும், சமயபுரம் மாரியம்மன் கோயில் பகுதியிலும், மக்களுக்கு எங்கு உணவு உள்ளிட்ட தேவைகள் உள்ளதோ அவற்றினை அறிந்து ரூ. 75 லடசத்திற்கு மேல் கொரோனா பரவல் காலத்தில் தனது சொந்த செலவில் உதவி செய்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர். ஜெயலலிதா சொல்லும் தாரகை மந்திரமான மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற வார்த்தைக்கு ஏற்ப மக்களால் எம்எல்ஏ வான கதிரவன், அவரது தொகுதி மக்களுக்காகவே தினமும் ஏதாவது உதவிகள் மட்டுமல்லாது, தொகுதியில் மக்கள் குறைகளை கட்சியினர் புடை சூழ சென்று கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார். இந்நிலையில் தான் இவரது செயலைப் பாராட்டி திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முருகானந்தம் மண்ணச்சநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார். இது குறித்து அதிமுக பிரமுகர் முருகானந்தனிடம் கேட்ட போது, மண்ணச்சநல்லூர் தொகுதியில் இது வரை இருந்த எம்எல்ஏக்கள் யாவரும் செய்யாததனை இவர் தனது சொந்த செலவில் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். அவரது செயலை பாராட்டுவதில் எவ்வித தவறும் இல்லை. இது குறித்து கட்சி தலைமை விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு உரிய விளக்கம் கொடுத்துள்ளேன் என்றார் முருகானந்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்