திருச்சி 33 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பாலக்கரை செங்குளம் காலனியில் குடிதண்ணீர் மற்றும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு மாதர் சங்க பகுதி தலைவி சாந்தா மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதி தலைவர் ஷாஜகான் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பொன்மகள் செயலாளர் சரஸ்வதி பொருளாளர் ரஷீலா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் லெனின் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்தப் முற்றுகை போராட்டத்தின் கோரிக்கைகளாக:- குடிசை மாற்று வாரியம் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீர் தினந்தோறும் முறையாக சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இங்கு குடியிருப்போர் தூய்மை பணியாளர்களாக இருப்பதால் காலை வேலையில் வரும் குடிநீரை பிடித்து வைக்க நேரம் இல்லாததால் பணிக்கு சென்று விடுகின்றனர். அதனால் குடிநீர் தினம்தோறும் மாலையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தினை மேம்படுத்திட வேண்டும்,

மேலும் தமிழக அரசின் நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் அடிப்படையில் நல சங்கங்களின் மூலம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்குளம் காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பாலக்கரை போலீசார் மற்றும் அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த 33-வது வார்டின் கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான திவ்யாவிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி தங்களின் கோரிக்கை நிறைவேறப்படவில்லை என்றால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *