திருச்சி கீழ சிந்தாமணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனு. இவர் திருச்சி தெப்பக்குளம் மெயின் கார்டு கேட் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்தப் பகுதியில் கரும்பு ஜூஸ் கடை வைப்பதற்கு கார் ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தயாளனிடம் வியாபாரி சீனு புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து அந்த பகுதியில் கரும்பு ஜூஸ் கடை நடத்துவதற்கும் அனுமதிக்க வேண்டு மென்றால் ரூ.50 ஆயிரம் பணம் தர வேண்டும் என ஆய்வாளர் தயாளன் கேட்டதாக கூறப்படுகிறது.‌

மேலும் சீனு அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கபடவில்லை. இதனையடுத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சீனு புகார் மனு அளித்தார். அப்போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மதுரை உயர் நீதிமன்றம் மனுவை விசாரித்து கரும்பு சாறு கடை நடத்துவதற்கு கோட்டை காவல் ஆய்வாளர் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மேலும் கடை நடத்துவதற்கு முழு சட்ட உரிமை உள்ளது என்றும், இரண்டு வாரத்திற்குள் கோட்டை காவல் ஆய்வாளர் இது சம்பந்தமாக பதில் அளிக்க கூறி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி முதல் தன்னுடைய கரும்பு ஜூஸ் கடை நடத்துவதற்கு கார் ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை கரும்பு ஜூஸ் கடையை சீனு திறந்த போது கடை முன்பாக பேரிகார்டை கார் ஓட்டுநர்கள் வைத்துள்ளனர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று சீனு கேட்டதற்கு கார் ஓட்டுநர் அண்ணாதுரை என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் தயாளனிடம் சீனு அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் இன்று காலை புகார் அளிக்க சென்றனர்.

இரவு நேரம் ஆகியும் தன்னுடைய புகாரை பெறாததால் குடும்பத்துடன் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்த தகவல் அறிந்து வந்த ஆய்வாளர் தயாளன் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி புகாரை பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்