மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்கள் மீது மரண தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த 10 லட்சம் நெல்மணி மூட்டைகளை தமிழக அரசு உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று காலை முதல் 46- நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார்.

இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆயத்தமான நிலையில் திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு விவசாயிகளை வெளியே செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அய்யாக்கண்ணு ,மாநில துணைத்தலைவர் மேகராஜன் ,செய்தி தொடர்பாளர் பிரேம் குமார் உள்ளிட்ட விவசாயிகள் அய்யாக்கண்ணு வீட்டு வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மேல்சட்டை அணியாமல் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதுபற்றி அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது.

மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு நாங்கள் உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றிருக்கிறோம். இருந்தபோதிலும் போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். புதிய வேளாண் சட்டத்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் பெண்களுக்கு கருத்தரித்தலில் பிரச்சனையும் இருக்கிறது. ஆகவேதான் இந்த சட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

அதேபோன்று மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை தருவதாக தெரிவித்தார். ஆனால் அவர் கூறியபடி விலையை அளிக்கவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு 200 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நெல்மணிகள் மழையில் நனைந்து துளிர்க்க தொடங்கியுள்ளது .ஆகவே ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் தினசரி 5000 மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று தொடங்கியுள்ள இந்த உண்ணாவிரத போராட்டம் 46- நாட்கள் தொடர்ச்சியாக பல்வேறு கட்டங்களில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். கடைசி நாள் விவசாயிகள் முழு நிர்வாண போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர் .அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *