காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினம் 233 வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:-

காஞ்சிபுரம் தொண்டை மண்டல 233 வது மடாதிபதியாக நான் 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டேன். இந்த மடம் தொண்டை மண்டல சைவ முதலியாருக்கு மட்டுமே உரிமையுள்ள மடம். இதற்கு மடாதிபதியாக தொண்டை மண்டல சைவ முதலியார்கள் மட்டுமே வர முடியும். அதன்படியே உரிய நடைமுறைகள் படி நான் மடத்தின் ஆலோசனை குழுவால் தேர்வு செய்யப்பட்டேன். இந்த சூழலில் கடந்த சில மாதமாக எனக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதய நோய் பிரச்சனையும் ஏற்பட்டது. மருத்துவர்கள் என்னை ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள் அதன் காரணமாக நான் என் சொந்த விருப்ப படி பதவியிலிருந்து விலகினேன். பதவி விலக வேண்டும் என என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. மடத்தின் சொத்துக்களை அனுபவித்து கொண்டு இருப்பவர்களும், அதனை அனுபவிக்க ஆசைப்படுபவர்களும் அவர்கள் மூலம் ஆதாயம் அடைய நினைப்பவர்களும் தங்களின் சுய நலத்திற்காக ஆலோசனை குழுவினரையும், அரசு அதிகாரிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அது மிகவும் வருத்தமாக உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு தொண்டை மண்டல சைவ முதலியார்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் உறுதியுடனும் இருந்து மடத்தின் வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து மடத்தின் ஆலோசனை குழு தலைவர் விஜயராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மற்ற மடங்களின் ஆதினங்கள் பதவி விலகும் போதோ அல்லது இறப்பதற்கு முன்பாகவோ அடுத்த ஆதினம் யார் என்பதை அறிவித்து விடுவார்கள் ஆனால் எங்கள் மடத்தை பொறுத்தவரை ஆதினமாவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படும் அதன்பின் ஆலோசனை குழுவின் மூலமே தேர்தல் நடத்தப்பட்டு ஆதினங்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 232 வது ஆதினம் இறந்த பின்பு அவ்வாறே 233 வது மடாதிபதியும் தேர்வு செய்யப்பட்டார். ஓர் ஆண்டுக்கும் மேலாக பொறுப்பிலிருந்த அவர் உடல் நல குறைவு காரணமாகவே பதவி விலக முடிவெடுத்துள்ளார். ஆனால் சிலர் சுய லாபத்திற்காக விமர்சனம் செய்கிறார்கள். பல கோடி சொத்துக்கள் உள்ளதாக சிலர் கூறுகிறார்கள் அவ்வாறு இருந்தால் அது எங்கே உள்ளது என்பதை அவர்கள் காட்டட்டும். ஆனால் மடத்தின் சொத்துக்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூட விமர்சிப்பதாக சிலர் கூறுகிறார்கள் அது உண்மையா என்பது எனக்கு தெரியாது ஆனால் அவர் கட்சியை சேர்ந்த மாநில வழக்கறிஞர் அணியை சார்ந்த ஒருவரே மடத்தின் இடத்தை ஆக்கிரமித்துள்ளார். உண்மையில் மடத்தின் மீது அக்கறை இருந்தால் அவர்கள் அதை மீட்டு தரட்டும்.

இந்து சமய அறநிலையத்துறை மடத்தை கையகப்படுத்தி விட்டதாக கூறும் தகவலில் உண்மை இல்லை. மடாதிபதி ஒருவர் பதவி விலகும் போது அவர் அறையை பூட்டி அறநிலையத்துறையினர் சீல் வைப்பார்கள். மீண்டும் புதிய ஆதினம் பொறுப்பேற்ற பின் அவர்கள் அந்த அறையை திறந்து விடுவார்கள் அது எப்பொழுதும் இருக்கும் நடைமுறை தான். ஆனால் சிலர் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புகிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை இருப்பதால் தான் மடம் இன்னமும் எங்களிடம் உள்ளது. அவர்கள் இல்லையென்றால் இந்த மடத்தை எப்பொழுதோ ஆக்கிரமித்திருப்பார்கள். இந்து சமய அறநிலைய துறை தான் இது போன்ற மடங்களை பாதுகாக்கிறது. மடத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்று தான் சிலர் இந்து சமய அறநிலையத்துறை மீது பொய்யை பரப்புகிறார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *