பஸ்சின் படிகட்டில் தொங்கியபடி வேண்டாத விபரீத பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்கள். விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வேண்டுகோள்.

கடந்த சில நாட்களுக்கு முன் கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் நிலையத்தில், பள்ளி மாணவ மாணவிகள் இருவர் ஓடும் மின்சார ரயிலில் ஃபுட்போர்டு அடித்துள்ளனர். வேகமாக புறப்படும் ரயிலில் ஏறும் மாணவி, ஆபத்தை சிறிதும் உணராமல் அசால்டாக ஃபுட்போர்டு அடித்தார். அவரைத் தொடர்ந்து மாணவர் ஒருவரும் இதேபோன்ற விபரீத சாகசத்தை செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண், மாணவன் மற்றும் மாணவியை பெற்றோர்களுடன் நேரில் அழைத்து விசாரித்து. மேலும், இதுபோன்ற விபரீத சாகசங்களில் ஈடுபட வேண்டாம் எனவும், படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கினார்.

திருச்சி செந்தணீர் புரத்தில் இருந்து, சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.‌ குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த பஸ்களில் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என அதிகமானோர் பயணித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி, விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதைக் கண்ட பொதுமக்கள் எச்சரித்தும், மாணவர்கள் பொருட்படுத்துவது இல்லை.

இதுபோன்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், இப்பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பஸ்கள் விடக்கோரி ஏற்கனவே இந்த இரு தொகுதிகளை சேர்ந்த கிழக்கு சட்டமன்ற தொகுதி இனிகோ இருதயராஜியிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். இந்நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் போக்குவரத்து காவலர்கள் இதுபோன்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வும், அறிவுரையும் வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இது குறித்து மாணவர்களிடம் பேசிய போது :-

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவும் இப்படி ஆபத்தை உணர்ந்தே நாங்கள் பயணம் மேற் கொள்கிறோம். இந்தப் பகுதியில் ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் அதிகப்படியான மாணவர்களுக்கு பஸ்ஸில் நிற்கக்கூட இடம் கிடைக்காததால் படிக்கட்டில் தொங்கியபடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் பல மாணவர்களுக்கு தொங்குவதற்கு கூட இடம் கிடைப்பதில்லை.

இதனால் செந்தணீர் புரம், சங்கிலியாண்டபுரம், காஜா பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக நடந்தே மேலப்புதூர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து பஸ் ஏறி செல்கின்றோம். மேலும் ஒரு சில மாணவர்கள் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு செல்கின்றன. அரசு உடனடியாக இந்தப் பகுதியில் காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதலாக பஸ் இயக்கினால் எங்களைப் போன்ற மாணவர்கள் பஸ் படிக்கட்டில் ஏன் தொங்கியபடி செல்லப் போகிறோம் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *