திருச்சி மத்திய சிறையில் போதைப்பொருள் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் திறம்பட செயல்பட்டு வரும் பிரிவாக மோப்ப நாய் பிரிவு உள்ளது. குறிப்பாக வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் சூர்யா என்ற மோப்ப நாயும் போதைபொருள் கண்டுபிடிக்கும் பிரிவில் பினோ என்ற மோப்ப நாயும் இரண்டும் கடந்த 11 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்தன.

இதில் மோப்பநாய் சூர்யா கோவையில் 10 மாத காலம் அடிப்படைப் பயிற்சியை முடித்துவிட்டு திருச்சி மத்திய சிறையில் பணிக்கு அமர்த்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் சிறப்பாக பணியாற்றி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சூர்யாவுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தது. இதற்காக கால்நடை மருத்துவப் பிரிவில் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக தஞ்சையில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சை செய்த பிறகும் குணமடையவில்லை.

இந்நிலையில் நேற்று மோப்பநாய் சூர்யா திடீரென உயிரிழந்தது. பின்னர் மோப்ப நாயின் உடலை திருச்சி பாலக்கரையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். அங்கு சவப்பெட்டியில் வைத்து சிறை வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து மோப்பநாய் சூர்யாவின் உடலுக்கு சிறைக்காவலர்கள் அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published.