வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 37-ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமற்றது என்று எந்த ஒரு அரசியல் கட்சி நிரூபித்தாலும் விவசாயிகளான எங்களை “செருப்பால் அடியுங்கள்” என்று கூறி செருப்பை தரையில் வைத்து நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும். மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு காவல்துறையில் அனுமதி கோரியிருந்தார்.

ஆனால் காவல்துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதைதொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி அண்ணாமலை நகர் திருச்சி- கரூர் பைபாஸ், மலர் சாலையில் உள்ள அவரது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை அக்டோபர் 12ம் தேதி தொடங்கினர். நவம்பர் 26 ஆம் தேதி வரை 46 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக 37-ம் நாளான இன்று விவசாயிகள் போராடும் போராட்ட கோரிக்கைகள் நியாயமற்றது என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் நிரூபித்தாலும் விவசாயிகளான எங்களை செருப்பால் அடியுங்கள் என்று கூறி செருப்பை தரையில் வைத்து நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *