வீ லவ் யூ பவுண்டேசன் சார்பில் 531 வது உலகளாவிய இரத்த தான இயக்கம் என்ற பெயரில் சிறப்பு இரத்த தான முகாம் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. வீ லவ் யூ பவுண்டேசன் தலைவி “ஜிங்கில் ஜா” அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இம்முகாமை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவசெல்வம் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து 120 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் இது போன்று சென்னையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் சென்னை, புதுச்சேரியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து வீ லவ் பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் கூறுகையில்….
வீ லவ் யூ பவுண்டேஷன் சார்பில் 197 நாடுகளில் ரத்ததான முகாம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் ரத்த விநியோகத்தில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை உள்ளது. ஒரு நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் ஒரு சதவீதம் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய ரத்ததானம் செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
இருப்பினும் இந்தியாவில் தகுதியான மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே ரத்ததானம் செய்கிறார்கள். ரத்த தானம் என்பது உயிரை காப்பாற்றக்கூடிய தன்னலமற்ற அன்பின் செயலாகும் எனவே உங்களால் முடிந்த அளவு ரத்த தானம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.