திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளம் ஊராட்சியில் உள்ளது அழிஞ்சகரை. இங்கு விநாயகர் கோயில் வருடாந்திர பூஜையில் வெடி வெடித்தபோது எதிர்பாராவிதமாக சிறுவனின் கை விரல்கள் சிதறியது.

அழிஞ்சகரை கிராமத்தைச் சேர்ந்த மருதை,லட்சுமி தம்பதியின் ஒரே மகன் சூர்யா(16). இவரின் தந்தை கடந்த மூன்று வாரங்களுக்கு முன் இறந்துவிட்டார். கூலி வேலை செய்யும் லட்சுமியும் மகன் சூர்யாவும் தனியாக வசித்து வருகின்றனர். 10 ம் வகுப்பு வரை படித்த சூர்யா தற்போது ஜேசிபி ஆப்பரேட்டர் பயிற்சி பெற்று வருகிறார்.

 இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு வருடாந்திர பூஜை நேற்று நடைபெற்றது. காலையில் பூஜைகள் முடிந்த பிறகு மாலையில் சூர்யா தீபாவளிக்கு வாங்கி மீதம் இருந்த வெடிகளை தன் வீட்டிலிருந்து எடுத்து வந்து கோயில் முன்பு வெடித்துள்ளார் அப்போது ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்தது. பின்னர் சூர்யா அந்த பட்டாசை தனது வலது கையில் எடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த பட்டாசு வெடித்ததில் சிறுவனின் கை 3 விரல்கள் சிதறியது.

வலியால் அலறித் துடித்த சூர்யாவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சூர்யாவுக்கு தொடர் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்