ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி சங்கர் நகரில் வசிப்பவர் கணேசன். இவரது மகன் நவீன்குமார்(37) இவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பிரபல ரவுடி என கூறப்படுகிறது. இவர் கடந்த 31-ந்தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த 7-ந்தேதி வெளியே சென்று வருவதாக சொல்லி விட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து நவீன்குமார் தந்தை கணேசன் கடந்த 25-ந்தேதி ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார், நவீன்குமார் நண்பர்களான தெப்பக்குளத்தெருவை சேர்ந்த கோவில்பிள்ளை(47), சந்திரமோகன்(39), வடக்குவாசல் பகுதியை சேர்ந்த சங்கர்(32), மணிமாறன்(34), கீழவாசல் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(37) ஆகிய 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், நவீன்குமார் உள்பட நாங்கள் அனைவரும் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு நெடுந்தெரு படித்துறை பகுதியில் கொள்ளிடம் ஆற்றினுள் அமர்ந்து மது அருந்தினோம்.

அப்போது எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நவீன்குமாரை நாங்கள் தாக்கினோம். அதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பின்னர் நவீன்குமார் உடலை மணலில் புதைத்து விட்டு வந்து விட்டோம் என கூறியதாக தெரிவிக்கப்பட்டது.இந்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவிஆணையர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கழனியப்பன், தாசில்தார் மகேந்திரன், வெள்ளிதிருமுத்தம் விஏஓ குமார், மேலூர் விஏஓ பத்மா முன்னிலையில் நவீன்குமார் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

நவீன்குமார் உடல் புதைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் சம்பவ இடத்திலேயே அவரது உடலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் செல்வமுத்துகுமரன், வெங்கட்ராமன் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *