கொரோனா நோய்த்தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தினை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் கொரொனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 01.08.2021 முதல் 07.08.2021 வரையிலான ஒரு வார காலத்திற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் மாவட்ட ஆடசித்தலைவர் சிவராசு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கொரோனாவைக் கட்டுப்படுத்தி பரவலைத் தடுத்திடும் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் , மருத்துவர்கள் , அலுவலர்கள் பணியாளர்கள் , மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர் . இதனைத் தொடாந்து கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் , முகக்கவசம் அணிதல் , சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் , அவசியமின்றி வெளியே செல்வதையும் , கூட்டம் கூடுவதையும் தவிர்த்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் , இரண்டு தவணைகள் கொரோனா நோய்த்தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் , கர்ப்பிணிகள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்களையும் , முகக்கவசங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களுக்கு வழங்கினார் . இதனைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனத்தின் மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் வெளியிடப்பட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ படக்காட்சிகளை திரையிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வாகனப் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் .
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் : தமிழக முதல்வர் உத்தரவின்படி கொரோனா நோய்த்தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மாவட்டம் முழுவதும் 01.08.2021 முதல் 07.08.2021 வரை ஒரு வார காலத்திற்கு நடத்தப்படுகிறது . கொரோனா தாக்கமானது மக்கள் விழிப்புணர்வாக இருந்து நோய்த்தாக்கம் குறையத் தொடங்கி தற்போது குறைந்துள்ளது . இந்நிலையில் மக்கள் முகக்கவசம் அணிவது குறைந்தும் , தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறைந்தும் காணப்படுகிறது . ஆடிவெள்ளியை முன்னிட்டு கோயில்களில் அதிகக் கூட்டம் கூடியது . இதனையொட்டி சென்னை மாநகரில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கினை முன்னிட்டு கோயில்களில் மக்கள் தரிசனம் செய்வது தடைசெய்யப்பட்டது . இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் கோயில்களில் தரிசனம் தடைசெய்யப்பட்டது . நமது மாவட்டத்திலும் பக்தர்களின் அளவுக்கதிகமான வருகையையொட்டி முன்னிட்டு ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் , சமயபுரம் , திருவானைக்காவல் , மலைக்கோட்டை , வயலூர் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் கோயில்களில் அர்ச்சகர்கள் பூஜை செய்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது . அதேபோல காவேரிக்கரையில் கூடுவதற்கும் , நீராடுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலை தற்போது துவக்கமாகி கேரளாவில் 10 தினங்களுக்குமுன் 6 ஆயிரமாக இருந்து இப்போது 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது . திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் கொரோனா எண்ணிக்கை 55 லிருந்து 70 ஆக உயர்ந்துள்ளது . இதைக் குறைப்பதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு அவசியமாகும் . கொரோனாவைத் தடுப்பதற்கு மிகச்சிறந்த மருந்து முகக்கவசம் அணிதல் , தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் அவசியமாகும் . மக்களிடம் விழிப்புணர்வு இல்லையென்றால் கொரோனா தாக்கத்தைக் குறைப்பது கடினமாகிவிடும் . எனவே , மக்கள் கொரோனாத் தடுப்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் . தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் . மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தெளிவான அறிவுறுத்தலின்படி கூட்டம் அதிகமாக உள்ள சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் , தடை செய்யப்படும் . கொரொனா நோய்ப் பரிசோதனை முன்பைவிட இப்போது அதிகமாக 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது . இது மேலும் உயர்த்தி 6 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார் . பின்னர் உழவர் சந்தையில் நடைபெற்ற கொரோனா நோய்த் தடுப்பூசி முகாமினையும் கொரோனா நோய் கண்டறியும் முகாமினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார் . இந்நிகழ்வில் துணை இயக்குநர் ( சுகாதாரப் பணிகள் ) டாக்டர் ராம்கணேஷ் , மாநகராட்சி உதவி ஆணையர் செல்வபாலாஜி , நகர்நல அலுவலர் டாக்டர்.யாழினி மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் .