தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 8,33,612 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற நாள் ஒன்றுக்கு 300 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் வழங்கும் வகையில் 03.01.2023 முதல் வருகிற 8 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு சென்று நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் வரும் 09.01.2023 முதல் 13.01.2023 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள நாட்கள் மற்றும் நேர விவரப்படி குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைக்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு விரிவான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் திருச்சி திருவளர்ச்சோலை பகுதியில் அரிசி குடும்பம் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு பரிசான கரும்பின் தரத்தை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் தொடர்பான புகார்கள் ஏதுமிருப்பின் 7338749030 மற்றும் 7338749305 இந்த அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.