தமிழக விவசாயிகள் கால்நடை பாதுகாப்பு கட்சி நிறுவனத் தலைவர் சத்தியம் சரவணன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சியை தொடங்கி வைத்து இன்று கொடி அறிமுகம் செய்துள்ளோம். ஏழை எளிய மக்களுக்காகவும்,கால்நடை வளப்போர்ரை பாதுகாக்கவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், இந்த கட்சியை தொடங்கியுள்ளோம். தமிழக அரசு ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும். வனத்துறையில் ஆடு மேய்க்க பழைய பட்டி பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும். கோழிக்கறிக்கு தமிழகம் முழுவதும் எவ்வாறு ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ அதேபோன்று ஆட்டுக்கறிக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கால்நடை வளர்ப்போர் இடம் விட்டு இடம் பெயர்ந்து மேய்ச்சலுக்காக காடுகளில் தனியாக இருப்பதால் சட்டமன்றத்தில் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி பாதுகாக்க வேண்டும்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகப்படியான மக்கள் ஆடு, மாடுகளை வளர்க்கும் தொழில் செய்து வருவதால் அங்கு பிரம்மாண்ட கால்நடை பூங்கா அமைத்து தரவேண்டும். தமிழகம் முழுவதும் பனைமரக் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். தற்போது செயல்படாமல் இருக்கும் பனைமர வாரியத்தை சீர்படுத்தி செயல்படுத்த வேண்டும். ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்துள்ளோம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தருவோம். தென் தமிழகத்தில் எங்களுக்கு 50 தொகுதிகளில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இவ்வாறு சத்தியம் சரவணன் கூறினார்.
