முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் அக்கட்சியினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவர்கள் பயன் பெரும் வகையில் இருக்கைகளுடன் கூடிய 36 இரும்பு மேஜைகளை பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். மேலும் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்:-

தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி எப்பொழுது அமையும் என ஜோசியம் கூற முடியாது. அவர் ஆட்சி போல் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் காங்கிரஸ் தொண்டர்களின் கனவு, அது நோக்கி தான் பயணம் செய்கிறோம். பாராளுமன்றத்தை ஜனநாயகத்தின் தொட்டில் என்றே கூறலாம். அது ஆளுங்கட்சியை பாராட்டும் இடமல்ல. மக்களின் பிரச்சனைகளை, கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவார்கள். அப்படி பேசும் போது ஆளுங்கட்சியை விமர்சிக்க கூடாது என்பதற்காக சில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என அறிவித்துள்ளார்கள். அதே போல பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்ய கூடாது என்கிறார்கள். இது ஜனநாயகத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை. ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் எடுத்துக்காட்டு. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நிச்சயம் பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில் எது தாழ்ந்த ஜாதி என கேள்வி கேட்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. தன் வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்பிற்காக போராடிய தந்தை பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் இது போன்ற கேள்விகளை கேட்டவரை எவ்வளவு மோசமான வார்த்தையில் திட்ட வேண்டுமோ அவ்வளவு மோசமான வார்த்தையில் திட்ட தோன்றுகிறது. அந்த கேள்வி கேட்டது யார், அதற்கு பொறுப்பாளர் யாரோ அவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேட்டியின் போது திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜவகர், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், காங்கிரஸ் இளைஞர் அணி மாநில தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *