சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் ரவி வயது 52. இவரது கீழ் வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு 3 வயது பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து, ரவி அந்த குழந்தையை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கொஞ்சியுள்ளார். அதே சமயம், அந்த குழந்தையும் தாத்தா என்று அழைத்து ரவியிடம் பாசமாக பழகியுள்ளது. தனது குழந்தையுடன் ரவி பாசமாக பழகுவதாலும், குழந்தையும் பிரச்சனை இல்லாமல் விளையாடுவதாலும் குழந்தையின் தாய் சந்தோசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென்று ஒரு நாள் அந்த குழந்தை, “அம்மா வலிக்கிறது” என்று சொல்லி அழுதுள்ளது.
குழந்தை விளையாடும் போது ஏதும் ஆகிவிட்டதா என்றபடியே, என்ன செய்தாய், எங்கே விழுந்தாய் என்று தாய் குழந்தையிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த குழந்தை, மேல் வீட்டு தாத்தா என்று கை காட்டி இருக்கிறது. இதில் அதிர்ச்சியான தாய் குழந்தையிடம் மேலும் விசாரித்ததில், தனக்கு தெரிந்த வார்த்தைகளிலும் செய்கைகளிலும் குழந்தை சொல்லியதைக் கேட்டு தாய் அதிர்ச்சி அடைந்தார். மூன்று வயது குழந்தை என்றும் பாராமல் அந்த குழந்தையிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறான் அரக்கன் என்று ஆவேசப்பட்டு, ரவியிடம் சென்று அந்த தாய் சண்டை இட்டிருக்கிறார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அளித்த ஆலோசனையின் பேரில், எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசாரிடம் சென்று புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் பேரில் எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசார் ரவியை கைது செய்து சென்னை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குழந்தையை கடத்திச் சென்ற குற்றத்திற்காகவும், 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகவும் ரவிக்கு 27 ஆண்டுகள் தண்டனை விதித்தார். மேலும் 15 ஆயிரம் அபராதம் கட்டவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் பெற்றோருக்கு நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். கடந்த 2018-ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தில் நீதிமன்றம் தற்போது இந்த பரபரப்பு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.