திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டுசந்தையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்கள் வாகனங்கள் மூலம் தங்களது ஆடுகளை கொண்டுவந்து விற்பனை செய்வார்கள்.
மேலும் தீபாவளி, ரம்ஜான், பக்ரீத் போன்ற விழா காலங்களில் பல கோடி கணக்கில் ஆடு விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு முதல் நாளான இன்று சமயபுரம் ஆட்டு சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெறும் என்று நினைத்து தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்கள் ஆடுகளை விற்பனை செய்வதற்காக குவிந்தனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களில் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் ஆடு விற்பனை நடைபெற்றது. இதில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலரும் ஆடுகளை முன்னேற்பாடாக வாங்கி சென்றதால் சமயபுரம் ஆட்டு சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது.