தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய 5 மண்டலங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சரவணன் கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாளர்கள் 2 – பேரில் ஒருவர் வெட்டப்பட்டும், மற்றொருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தற்போதுவரை கைது செய்யவில்லை. டாஸ்மாக் பணியாளர்களின் பணி பாதுகாப்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை எந்த அரசும் செய்யவில்லை. தமிழக முதல்வர் டாஸ்மாக் பணியாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யவும், பணி நிரந்தரம் காலமுறை ஏற்ற ஊதியம் ஆகியவற்றை நிறைவேற்றித் தரக் கோரியும்,
டாஸ்மாக்கில் கொலை, கொள்ளை மற்றும் வன்முறையாளர்களால் பணியாளர்கள் கொடூரமாக தாக்கப்படுவது போன்ற தொடர் நிகழ்வுகள் நடைபெற்று வருவதை கண்டித்தும், வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உடனே நஷ்ட ஈடு வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் மாநில துணைத் தலைவர் கோவிந்தராகன், மாநில துணைத் தலைவர் உதயகுமார் மாநில செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.