ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணிபுரிந்து வந்தவர் இந்திரன். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் மிகவும் இனிமையாக உற்ற நண்பனாகவும் கனிவாகவும் பழகி வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பணி நேரத்தில் மிகவும் பொறுப்புடனும் அக்கரையுடனும் நடந்து அந்த பகுதி முழுவதும் நற்பெயர் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் நகர் பேருந்தில் மதுபோதையில் சிலர் பிரச்சனை செய்வதாக காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை பொது இடத்தில் மதுபோதையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது. பேசாமல் வீட்டுக்குச் செல்லுங்கள், இல்லையென்றால் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என, அவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அப்போது எஸ்.ஐ இந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், நெஞ்சில் கை வைத்தபடி மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட பொதுமக்களும் சக காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக எஸ்.ஐ இந்திரனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இந்த கொரானா காலத்திலும் காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது