தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்தப் பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு முன்னாள் தலைமை பொறியாளர் முனைவர் பரந்தாமன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைமைப் பொறியாளர் மனோராஜ் செயற்பொறியாளர் வேம்படி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க பொதுச்செயலாளர் வீரப்பன் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடமும் சங்கப் பொதுச் செயலர் வீரப்பன் பேட்டி அளிக்கையில்:
தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்பது உண்மையல்ல. தமிழகத்தில் பெய்யும் மழை அளவை முழுமையாக சேகரித்து பயன்படுத்தினால் தண்ணீர் தன்னிறைவு தமிழகம் என்பது எளிதாகும். தமிழகத்தில் உள்ள 88 அணைக்கட்டுகள், 39 ஆயிரம் ஏரி, குளம், கண்மாய்களில் உள்ள வண்டல் மணலை ஒரு மீட்டர் முதல் 2 மீட்டர் வரை ஆழப்படுத்தி அள்ளினால் போதுமானது. கூடுதலாக 300 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும். நீர்நிலைகள் முழுமையாக தூர்வாரினால் ஆயிரம் டிஎம்சி என்பதை 1, 500 டிஎம்சி வரை உயர்த்தி தண்ணீர் தேக்க முடியும்.
இதுமட்டுமல்லாது, தமிழகத்தில் ஆண்டுதோறும் பெய்யும் 925 மீ.மீ. மழையை முழுமையாக தேக்கினால் 2,500 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். ஆனால், சேமிப்பு வசதியில்லை. அதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் எந்த பகுதியிலும் ஆற்று மணல் அள்ள அனுமதிக்க கூடாது. மாற்று மணலை பயன்படுத்தலாம். இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்யலாம். இதேபோல, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். காவிரியில் உபரிநீர் வரும்போது அதனை பம்பிங் ஸ்டேஷன் மூலம் குழாய்களில் நீரேற்றம் செய்து வறட்சி பகுதிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். காவிரி, தாமிரபணி, வெள்ளாறு, குண்டாறு உள்ளிட்ட நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் உள்ளதைப் போன்று பம்பிங் ஸ்டேஷன் அமைத்து வெள்ளநீரை வறட்சி பகுதிகளுக்கு திருப்ப வேண்டும்.
இந்த திட்டங்களை செயல்படுத்தினால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு பெறும். கர்நாடகத்தில் 1974இல் 11 லட்சம் ஏக்கரில் மட்டுமே பாசனம் இருந்தது. நடுவர் மன்ற தீர்ப்புக்கு முன்னதாக 22 லட்சம் ஏக்கராக அதிகரித்துவிட்டனர். 5 அணைகள் கட்டியுள்ளனர். தற்போது, கபினி, கேஆர்எஸ் ஆகிய 2 அணைகளில் இருந்துதாந் தமிழகத்துக்கு தண்ணீர் வருகிறது. அதனையும் தடுக்கும் வகையில் பெங்களூரூ குடிநீர்த் திட்டம் எனர பெயரில் 67 டிஎம்சி தண்ணீர் தேக்க மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கிறது கர்நாடகம். இது பித்தலாட்டம். அட்டூழிய நடவடிக்கையாகும். மேக்கேதாட்டில் அணை கட்டினால் மேட்டூருக்கு தண்ணீர் வராது. காவிரி, டெல்டா பாலைவனமாகும். தமிழக அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் அவர்.இக் கூட்டத்தில், சங்கத்தின் துணைத் தலைவர் கண்ணப்பன், முன்னாள் செயற்பொறியாளர் தி.த. சண்முகவடிவேல் மற்றும் சங்க நிர்வாகிகள், அயிலை சிவசூரியன், ம.ப. சின்னதுரை, கவுண்டம்பட்டி சுப்பிரமணியம் உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், ஓய்வு பெற்ற பொறியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.