திருச்சி நம்பர் 1 டோல்கேட் தாளக்குடி பகுதியில் உள்ள தெருவில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் சிலர் அங்கிருந்து வீட்டின் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்ததை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பொதுமக்களை கண்ட வாலிபர்கள் அங்கிருந்து வேகமாக இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஹரி சபரி மணி உள்ளிட்ட இளைஞர்கள் அங்குள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மைதானத்திற்கு அருகே உள்ள புதரில் பிரதீஷ் சிவகுரு ராகுல் ஆகிய வாலிபர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். விளையாடி கொண்டிருந்த வாலிபர்கள் போதை பொருள் பயன்படுத்தும் வாலிபர்களுடன் இது போன்ற தவறான செயல்களை இந்த விளையாட்டு மைதானத்தில் இதுபோன்ற தவறான செயல்களை செய்யாதீர்கள் என எடுத்து கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக ராகுல், பரந்தாமன், ரோஹித், பிரசாத் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் நேற்றிரவு 3 இரு சக்கர வாகனத்தில் வந்து ஹரி, கோபி, மணி ஆகியோர் வசிக்கும் தெருவில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் வீட்டின் மேற்கூரை சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது. மேலும் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடம் வந்த காவல் துனை கண்காணிப்பளார் சுப்பையா விசாரணை மேற்கொண்டு நாட்டு வெடிகுண்டுகளை விசிய குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இதில் பரந்தாமன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் சில நாட்களுக்கு முன் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருச்சி மாவட்டத்தில் அரிவாள், கத்தி கலாச்சாரத்தை தொடர்ந்து தற்போது நாட்டு வெடி குண்டு வீசும் கலாச்சாரம் தொடர்கதையாகி வருகிறது. இது போன்று குண்டு வீசும் குற்றவாளிகளை ஆரம்பத்திலேயே காவல்துறை ஒடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.