திருச்சி பீமநகர் கீழக்குயத்தெரு அரசமர சோலை பகுதியில் கடந்த 100 வருடமாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் காவல் தெய்வமான ஸ்ரீ சங்கிலி ஆண்டவர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ சங்கிலி ஆண்டவர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ காவேரி காளியம்மன், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ மாசி பெரியண்ண சுவாமி மற்றும் ஸ்ரீ மதுரை வீரன் ஆகிய தெய்வங்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தஙகளின் வேண்டுதல்களாக குழந்தை பாக்கியம் வேண்டியும், கொடிய நோயிலிருந்து குணம் அடையவும். பள்ளி மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், உலக நன்மைக்காக வருகின்றனர். மேலும் பௌர்ணமி மற்றும் அமாவாசைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த வருடம் இந்த கோவிலில் முதல்முறையாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீ சங்கிலி ஆண்டவர் சுவாமி கோவில் இருக்கும் இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் எனவும் இது சம்பந்தமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உடனடியாக இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அமைச்சர் கே என்.நேருவிடம் சென்று அந்த இடத்தை கோவிலுக்கே தரும்படி கேட்டு கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து கோயில் இடம் பிரச்சனையில் உதவி செய்வதாக அப்போது தெரிவித்திருந்தார்.
தற்போது நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும் இன்று காலை பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வழங்க வந்த அமைச்சர் கே என் நேருவிடம்
கோவில் மருளாளி கதிரேசன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் துர்காதேவி ஆகியோர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் நேரில் சென்று தங்களின் நன்றி தெரிவித்தனர்.