தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சிவசூரியன் தலைமையில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க புரவலர் தீட்சிதர் பாலசுப்பிரமணியன், தமாகா விவசாயப் பிரிவு பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றிய வாழை சாகுபடி விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
‘அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டத்தில், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தண்ணீர் அறவே இல்லாத காரணத்தினால், பிஞ்சு விட்ட வாழைகள் கருகி வருகின்றன. மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் வீசிய சூறைக்காற்றினால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள்,, வெற்றிலைக் கொடிகள், தென்னை மரங்கள் முறிந்து போய் உள்ளன.
விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கந்து வட்டிக்காரர்களிடம் கடன்களை பெற்றும், குடும்ப நகைகளை அடகு வைத்தும், ஒரு ஏக்கருக்கு, விதைச்செலவு, நடவுச் செலவு, உரச் செலவு, பூச்சிமருந்து செலவு என்று, 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் இயற்கை பேரிடர் காரணமாக இழப்பு ஏற்பட்டதற்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.