கடந்த 20ஆம் தேதி +2 தேர்வுக்கான முடிவுகள் வெளியாதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதற்காக பல்வேறு கணினி மையங்களில் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு உதவுவதற்காக “மாணவர் சேர்க்கை உதவி மையம்” காஜாமலையில் உள்ள (EVR) தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை உதவி மையத்தை கல்லூரி முதல்வர் சுகந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். நேற்று முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை இம்மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்கும் மாணவ, மாணவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ் மற்றும் ஏடிஎம் கார்டோடு இணைக்கப்பட்ட அலைபேசி எண் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.