திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ளம் காரணமாக கரையோர மற்றும் தாழ்வான தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு செய்யவும் , பொதுமக்களை வெள்ளப் பகுதியிலிருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்து தங்க வைப்பதற்கும் ஒரு காவல் ஆய்வாளர் , 4 காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 80 காவலர்கள் கொண்ட திருச்சி மாநகர காவல் பேரிடர் மேலாண்மை குழுவினர்களை தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை பகுதியில் தயாராக இருக்க வேண்டும் என்றும் , நீச்சல் தெரிந்த காவல் ஆளிநர்களுக்கு பாதுகாப்பு பணிக்கு நியமித்தும் , பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மிகவும் கவனமுடன் மீட்பு பணியில் ஈடுபடுமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார் . மேலும் இவர்களுடன் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிடம் அவர்கள் , காவல் உதவி ஆணையர் ஸ்ரீரங்கம் சரகம் , காவல் உதவி ஆணையர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு , காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர் .
இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரப்பெற்று, திருச்சி கலையரங்கம் வளாகத்தில் உள்ள கலைஞர் திருமண அரங்கில் தயார் நிலையில் உள்ளனர். இவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், சந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.