திருச்சி மாநகர் பகுதி முழுவதும் கால்நடைகளான ஆடு,மாடு,குதிரை ஆகியவைகளை வளர்ப்போர்கள் சாலையில் அவிழ்த்து விடக்கூடாது இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலும், பாதிப்பும் ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இருப்பினும் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கால்நடைகள் சுற்றி திரிந்த வண்ணம் உள்ளது. இதனை அடுத்து திருச்சி மாநகரில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோணக்கரையில் உள்ள மாடுகள் பாதுகாப்பகத்தில் வைக்கப்படுகிறது. மாட்டின் உரிமையாளர் வந்து பெற்றுக் கொண்டால் காளை மாட்டிற்கு பத்தாயிரம் ரூபாயும், பசு மாட்டிற்கு ஐந்தாயிரம் ரூபாயும், ஆடுகளுக்கு 2000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கான பிரத்தியாக லாரி மூலம் மாடுகள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பிடிக்கப்பட்டது. சாலைகளில் பொது மக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் கால்நடைகள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் புகாரினையடுத்து திருச்சி மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.