திருச்சி சமயபுரம் பகுதிக்கு உட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, இருங்களூர் கைகாட்டி, திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் சந்தை கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்களிடம் இருசக்கர வாகனம்,செல்போன், நகை, பணம் உள்ளிட்டவைகளை ஒரு கும்பல் வழிப்பறி செய்து வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தொடர் விசாரணையில் போலீசார் இறங்கினர்.

மேலும் இப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சமயபுரம் காவல்காரன் தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் சூரிய பிரகாஷ் வயது 21, சமயபுரம் செல்லாண்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் யோகேந்திரன் வயது 20 , சமயபுரம் சேனியர் கள்ளிக்குடியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் தர்மராஜ் வயது 24, சமயபுரம் சந்தை கேட் சோலைநகரை சேர்ந்த சுப்ரமணின் என்பவரின் மகன் ஷியாம் சுந்தர் வயது 21 மற்றும் 17 வயதான சிறுவன் ஆகியோர் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. வாலிபர்களை பிடித்து விசாரணை செய்ததில் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதில் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜம்பு, ஹரிஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்டு கைதான வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *