அரசு விதிமுறைப்படி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் 10 மணி நேரம் செயல்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறுகனூர் காவல் சரகத்திற்கு உட்பட பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் உள்ள பாரில் சட்டவிரோத மது பாட்டில்கள் விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருகிறது.
பார் உரிமம் பெற்ற முக்கிய பிரமுகர்கள் அரசு கட்டுப்பாட்டை மீறுவதுடன் தங்களின் சுய லாபத்திற்காக காலை 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பும், இரவு 10 மணிக்கு கடை மூடிய பிறகும் 14 மணி நேரம் சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை நாட்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதால் இதில் பெரும்பாலும் வெளி மாவட்டங்களில் தயாரித்து இறக்குமதி செய்யப்பட்ட போலி மது பாட்டில்கள் விற்கப்பட்டுவதாக கூறப்படுகிறது.
சிறுகனூர் போலீசாரின் முழு ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த சட்ட விரோத மது விற்பனையை கண்டுகொள்ளாமல் இருக்க இதன் மூலம் கிடைக்கும் கையூட்டு பணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சில முக்கிய காவல் அதிகாரிகளுக்கும் செல்வதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு டாஸ்மாக் கடைகளில் உள்ள பாரில் நடைபெறும் சட்ட விரோத மது பாட்டில் விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.