தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் (செப்டம்பர் 1) இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் வருடம்தோறும் இரு கட்டமாக கட்டணங்கள் உயர்த்தப்படும். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 28 சுங்கச்சாவடிகளில், இன்று முதல் சுங்கக்கட்டணம் உயருகிறது. அதன்படி, திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலபட்டி, கரூர், வேலஞ்செடியூரில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர், புதூர் பாண்டியபுரம், மதுரை, நாமக்கல் ராசம்பாளையம் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமலாகிறது. சேலம், ஓமலூர், நத்தக்கரை, வைகுண்டம், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தருமபுரி பாளையம், குமாரபாளையம், விஜயமங்கலம் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் சுங்கக்கட்டணம் அதிகரிக்கிறது. இதேபோல் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது.

கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக 90 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில்,தற்பொழுது 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 100 ரூபாயாகிறது. பலமுறை பயணிக்க 135 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 150 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வகை வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் 2, 660 ரூபாயில் இருந்து, 3,045 ரூபாயாக உயர்ந்துள்ளது. இலகு ரக வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணம் 180 ரூபாயாகவும், பலமுறை பயணிக்க 265 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் 5,330 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு ஒருவழி கட்டணம் 355 ரூபாயாகவும், பலமுறை பயணிக்க 535 ரூபாயாகவும் சுங்கக் கட்டணம் அதிகரிக்கிறது. மாதாந்திர கட்டணம் 10 ஆயிரத்து 665 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சு வாகனங்களுக்கு ஒரு வழிக்கட்டணம் 570 ரூபாயாகவும். பலமுறை பயணிக்க 855 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் 17 ஆயிரத்து 140 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் அனைத்தும் இன்று செப்டெம்பர்1 முதல் அமலுக்கு வந்தது..,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *