பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சூரியூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில் துவங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உறுதிமொழி வாசிக்க, மாடிபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..
அதனைத் தொடர்ந்து முதல் காளையாக, நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் காளை இளைய காசி அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாரியம்மன் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. திருச்சி சூரியூரில் ஒவ்வொரு சுற்றிலும் காளையை அடக்குவதில் வீரர்கள் ஆர்வம் காட்டினர். வீரர்கள் காளையை அடக்குவதையும், காளைகள் வீரர்களை தெறிக்கவிடுவதையும் காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.
சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் வயது (25) என்ற இளைஞரும் வந்திருந்தார். பார்வையாளர் பகுதியில் நின்றிருந்த அவரை ஜல்லிக்கட்டு காளை திடீரென முட்டியதில் படுகாயமடைந்தார். உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனாலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும், 627 ஜல்லிக்கட்டு காளைகளும் கலந்து கொண்டன. அதிகமான ஜல்லிக்கட்டு காளைகளை பிடித்த வீரர் பூபாலனுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தங்க மோதிரம், பைக் வழங்கினார்.
இப்போட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கவுன்சிலர்கள் காஜா மலை விஜி, செந்தில் நாதன், பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்