திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதன் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: –
கடந்த 20 ஆண்டுகளாக என்னென்ன திருச்சி மாவட்டத்திற்கு தேவை என்பதை ஆராய்ந்து இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன். ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆறு மக்கள் பிரதிநிதி அலுவலகங்கள் திறக்கப்படும். திருச்சியிலும் புதுக்கோட்டையிலும் ஐடி பார்க் அமைக்கப்படும். உலக தரம் வாய்ந்த ஒரு கட்டமைப்புடன் பசுமை பூங்கா திருச்சியிலும் புதுக்கோட்டையிலும் அமைக்கப்படும். மத்திய அரசின் ஒப்புதலோடு புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் விதமாக நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்படும். திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும். கந்தர்வ கோட்டையில் முந்திரி வியாபாரிகள் உலக அளவில் ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும். திருச்சி காந்தி மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றாமல் அதே இடத்தில் மேம்படுத்தப்பட்டு வியாபாரம் செய்ய வழிவகை செய்யப்படும். திருவரங்கம் மற்றும் திருவானைக்காவல் அடைமனை பட்டா பிரச்சனை சரி செய்யப்பட்டு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். திருச்சியை இரண்டாவது தலைநகரமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மணல் கொள்ளை காரணமாக திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. திருச்சியில் மூன்று நாளுக்கு ஒரு முறையும் புதுக்கோட்டையில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் வருகிறது. எனவே, மணல் கொல்லையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கொண்டு வரப்படும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் செந்தில் நாதனின் முதல் கட்ட தேர்தல் அறிக்கையாக இதனை வெளியிட்டுள்ளேன் வரும் 12ஆம் தேதி முழு அறிக்கையையும் வெளியிடுவேன் என கூறினார். அதிமுக பாஜகவில் இருந்து வெளிவந்ததற்கு சிறுபான்மையினர் வாக்கு காரணம் இல்லை இதை ஒரு காரணமாக கூறி வெளியேறினர். திராவிடம் ஆரியம் என்று தமிழகத்தில் உள்ளது திராவிடர்களான திமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் என்ற ஒரு ஆரியர் தான் தேவைப்பட்டார் அவர்களுக்கு தேவையென்றால் வைத்துக் கொள்வார்கள் இல்லை என்றால் விலகி விடுவார்கள்.என கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், அமமுக அமைப்பு செயலாளர் சாரு பாலா தொண்டைமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.