திருச்சி மாவட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தின் குறிக்கோள்கள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மாலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி தலைமையில் சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதியில் உள்ள குறைகள் குறித்து தெரிவித்தனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கூறுகையில்..,
தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பத்தாண்டிற்கு பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் குறித்து முதலமைச்சரிடம் முறையிடப்படும். வயலூர் சாலை போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி நீதிமன்றம் முதல் வயலூர் வரை 60 அடி சாலை அமைத்து ஒரு வழி சாலையாக மாற்றுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் பணிகள் நடைபெற உள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாலைகளை தற்காலிகமாக சரி செய்து வருகிறோம். புதிதாக நான்கு பாலங்கள் கட்ட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தற்பொழுது மே மாதமே மேட்டூரில் இருந்து நீர் திறக்கப்பட்டு விட்டது இதனால் இந்த வருடத்தில் தடுப்பு அணை கட்டுவது சாத்தியமற்றது அடுத்த ஆண்டுக்குள் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார்.