தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய மின்னணு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சிகளில், 401 கவுன்சிலர்களுக்கான பதவிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுது. முன்னதாக, 3 இடங்களில் போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்தெடுக்கப்பட்டதால், 398 கவுன்சிலர் பதவிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுது. இதற்காக 1258 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 1926 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நடந்த வாக்குப்பதிவின் இறுதிகட்ட நிலவரப்படி மாநகராட்சியில் 57.25 சதவீதமும், நகராட்சியில் 70.44 சதவீதமும், பேரூராட்சியில் 74.87 சதவீதம் என மொத்தம் 61.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் பதிவான வாக்கு மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று பதிவான வாக்குகள் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.