திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக இன்று அளித்தனர்.
அதன்படி திருச்சி கருமண்டபம் 56 வது வார்டு மாமன்ற உறுப்பினர் PRB மஞ்சுளாதேவி மற்றும் திமுக வட்ட செயலாளர் PRB பாலசுப்பிரமணியன் ஆகியோர் இன்று காலை மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி கருமண்டபம் 56-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் சீரான குடிநீர் வசதி, சாலை வசதி செய்து தரக்கோரியும், கொத்தமங்கலம் ராம்ஜி நகர் பகுதியில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தரக் கோரியும், 56-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடித்துதரக் கோரியும், அதேபோல் இப்பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக திரியும் தெரு நாய்களை பிடிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான், பொன்மலை கோட்ட தலைவர் துர்கா தேவி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.